கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துகொண்டு ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் இரா. குமரகுரு, ரிஷிவந்தியம் தொகுதி பாமக வேட்பாளர் செழியன், சங்கராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராகேஷ், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜீவ் காந்தி, திருக்கோவிலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது உரையாற்றிய அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே ஊழல் அரசியலை கற்றுக் கொடுத்ததாகவும், அதைவிட பல மடங்கு ஊழல் செய்பவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எனவும் குற்றம் சாட்டினார். கழிப்பறை மருந்துகள் வாங்குவதில்கூட ஊழல் நடைபெற்றதாக அவர் விமர்சித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை சம்பவங்களில் திமுக நிர்வாகிகள் தொடர்புடையதாக குற்றச்சாட்டு உள்ளதாக கூறினார். அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்த நிலையில், முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என்றும் அவர் விமர்சித்தார். இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரிப்பதால் உண்மை வெளிவராது; சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியான முடிவு என்றும், நியாயமான ஆட்சி என்றால் அதனை ஏற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் தினமும் போதைப்பொருள் வழக்குகள், பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட ஆட்சி மக்களுக்கு தேவையா என கேள்வி எழுப்பினார். 10 ரூபாய் ஆளை சிறந்தவர் என பாராட்டி, ஆண்டு 24 ஆயிரம் ரூபாய் மக்களிடமிருந்து எடுக்கும் இந்த ஆட்சி வேண்டுமா? என்றும் அவர் விமர்சித்தார்.
அதிமுக தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் ஆனால் திமுகவினர் குடும்ப நலனுக்காக செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போன்றவர்கள் எனவும் குற்றம் சாட்டினார். திமுகவில் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் அமைச்சர்களாக உள்ளனர்; தற்போது பலர் மீண்டும் அதிமுகவில் போட்டியிடுகின்றனர் என்பதும் திமுக தேய்ந்து வருவதை காட்டுகிறது என்றார்.
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆனால் ஸ்டாலின் கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் முதல்வரானார் என கூறிய அவர், ஸ்டாலின் இனி ஒரு வார்த்தை பேசினால், நான் பத்து வார்த்தை பேசுவேன் என ஆவேசமாக தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் பல சட்டக் கல்லூரிகள், பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்றும், தற்போதைய திமுக ஆட்சியில் மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் குற்றம் சாட்டினார். மேலும், திமுக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதே அதன் சாதனை என விமர்சித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் பாதி கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், புதிய அறிக்கையும் குடும்ப நலனை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, ஸ்டாலின் அரசு தோல்வியடைந்த அரசு பை பை ஸ்டாலின் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment